child

child

Monday, April 15, 2013

குழந்தைக் கவிதை

வேலை முடிந்து,
வீட்டிற்கு செல்லும் வழியில் 
நினைவு வந்தது, 
என் செல்லக் குழந்தையின் 
சின்ன வேண்டுகோள்...
"அப்பா... வரும் போது
டெடி பியர் பொம்மை வாங்கிட்டு வாங்க.."

அவசர அவசரமாக,
கடை, கடையாக ஏறி இறங்கினேன்..
எதுவும் என் செல்லத்திற்கு
பிடித்த மாதிரி இல்லை...

சில முறைத்தும்,
சில விறைத்தும்,
சில நீண்டும் ,
சில மாண்டும்,

என்ன செய்ய..?
என்ற குழப்பத்திலே
நொடி நகர, நகர..
நரகமாக...

ஒரு வழியாக கண்டேன்,
என் செல்லத்தின் செல்லத்தை..
தன்னை கொண்டுபோய்
சேர்த்துவிடு என்றபடி,
கைவிரித்து அழைத்தது...

டெடி பியர் வாங்கிய,
மகிழ்ச்சியோடு...
வீட்டிற்கு புறப்பட்டேன்..

வழியெங்கும் சந்தோஷம்,
வானில் தோரணம்..
கட்டிக் கொண்டிருந்தது...

"அய்ய்ய்...அப்பா...
டெடி பியர் எனக்காக...!"
என்றபடி கையின் இடுக்கில்..
பொம்மையைப் பிடித்தபடி,
கட்டிப்பிடித்து முத்தமிட்டது
குழந்தை...

மூச்சு முட்ட அன்பினில்,
மூழ்கி திளைப்பதை,
பொறாமையோடு,
பார்த்துக்கொண்டிருந்து
பொம்மை...!!!

உணவு முடிந்து,
உறக்கம் முடிந்து,
எழுந்தேன்

டெடி பியர் ஷோகேஸில்
இருந்தது...!!

குழந்தையை அழைத்துக் கேட்டேன்..
"என்னடா செல்லம்...
டெடி பியர் கூட விளையாடலையா...
அங்க வச்சுட்ட...?"
என்றேன் ஆச்சர்யமாக...

"அப்பா...
டெடி பியர் உன்னை போல
இல்லப்பா...
நான் முத்தாக் கொடுத்தா...
பதிலுக்கு முத்தா தரமாட்டிக்குது..."
என்று சொல்லிவிட்டு
கன்னத்தில் முத்தமிட்டது குழந்தை...
என் முத்தத்தை எதிர்நோக்கி...

கதவினிடுக்கு வழியே,
தெறிக்கும் மழைச்சாரல்,
முகத்தில் பட்ட சந்தோஷத்தில்...
குழந்தைக்கு மாறி மாறி
மாரியாக கன்னத்தில் முத்தமிட்டேன்...!!!


----> கவிதைகளின் நாயகன்  (ம.ராஜசேகரன்)




2 comments:

  1. அற்புதம்...

    எளிய நடை தான்... ஆனால் அதிலும் அன்பை இழைத்து வரியில் எழுதி இருப்பது அழகு...

    குழந்தை கேட்பதையெல்லாம் வாங்கி தரும் அன்பு அப்பா...

    குழந்தை கேட்டதே என்று ஏதோ ஒன்று வாங்கி தராமல்... தேடி தேடி குழந்தையின் விருப்பம் ஒவ்வொன்றாக மனதில் நினைவு வைத்து வாங்கி வந்தால் குழந்தை அதை பார்த்து ரசித்து விளையாடிவிட்டு ஷோகேஸ்ல வைத்துவிட்டதே.. வாசித்த எனக்கும் அது தான் தோன்றியது ஏன்???? என்று...

    குழந்தை சொன்ன பதில் விதிவிதிர்த்துவிட்டது... அதானே... அப்பா பொம்மைக்கு நான் முத்தம் கொடுத்தால் உன்னைப்போல அது திருப்பி தரமாட்டேன்கிறது....

    எத்தனை நுணுக்கம்..

    அப்பாவின் அம்மாவின் அன்புக்கும் முத்தங்களுக்கும் அளவேது? கணக்கு தான் ஏது?

    ரசித்தேன்பா.. அற்புதம்.... தொடர்ந்து எழுதுங்கள்.. அன்புவாழ்த்துகள்...

    ReplyDelete